முதல்கட்டமாக 13 டாக்டர்கள் நியமனம்
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் முதல்கட்டமாக ஒப்பந்த அடிப்படையில் 13 டாக்டர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம், ஜூன்.2-
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் முதல்கட்டமாக ஒப்பந்த அடிப்படையில் 13 டாக்டர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சிகிச்சை
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதன்காரணமாக ராமநாத புரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஏராளமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தொற்றுக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர்களும் செவிலியர்களும் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலர் குணமடைந்து உள்ள நிலையில் பலர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
பற்றாக்குறை
இதுபோன்ற காரணங்களில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் 50 டாக்டர்கள், 60 செவிலியர்களை நியமிக்க உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் மலர்வண்ணன் கூறியதாவது:- அரசு தற்காலிகமாக டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம் செய்ய உத்தரவிட்டு உள்ளது. இதன்படி தற்போது 13 டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 3 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. செவிலியர்கள் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
நியமனம்
இந்த பணி முடிவடைந்ததும் ஓரிரு நாளில் செவிலி யர்கள் மற்றும் டாக்டர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தேவையான அனைத்து டாக்டர்களும் செவிலியர்களும் தற்காலிகமாக நியமனம் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளதால் தேவையான பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த பணி 3 மாத காலத்திற்கு தற்காலிகமானது. அரசின் வழிகாட்டுதல் படி ஒப்பந்தம் முடிவடைந்ததும் அதற்கு ஏற்ப முடிவு செய்யப்படும். கூடுதலாக டாக்டர்கள் செவிலியர்கள் நியமனம் செய்யப்படுவதால் கொரோனா சிகிச்சை மட்டுமின்றி அனைத்து பிரிவு சிகிச்சைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும்.
தனிக்கவனம்
தற்போது ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சை பாதிப்பு யாருக்கும் இல்லை. அதுகுறித்து கண் டாக்டர்கள் குழுவினருடன் சேர்ந்து கொரோனா நோயாளிகள் உள்ளிட்ட அனைவரின் மீதும் தனிக்கவனம் செலுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.