கல்லக்குடி அருகே மொபட்டுகளில் மணல் கடத்திய 4 பேர் கைது
கல்லக்குடி அருகே மொபட்டுகளில் மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்;
கல்லக்குடி,
கல்லக்குடி அருகே மொபட்டுகளில் மணல் கடத்திச்சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மணல் கடத்தல்
கல்லக்குடி அருகே விரகாலூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் இருசக்கர வாகனத்தில் அரசு அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் கடத்துவதாக கல்லக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த 4 மொபட்டை மறித்து சோதனை செய்த போது அதில் ஆற்று மணலை மூட்டைகளில் கடத்தி செல்வது தெரியவந்தது. உடனே மொபட்டுகளை ஓட்டி வந்த 4 பேரையும் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
4 பேர் கைது
விசாரணையில் அவர்கள் குலமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 36), சந்திரகுமார்(47), நத்தமாங்குடி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன்(47), கனகராஜ்(47) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணலை மூட்டைகளில் கட்டி கடத்தி செல்வது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 4 மொபட்டுகள் மற்றும் 12 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.