காவலர் பல்பொருள் அங்காடி சார்பில் போலீசாருக்கு வாகனம் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை; பரமத்திவேலூரில், துணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

காவலர் பல்பொருள் அங்காடி சார்பில் போலீசாருக்கு வாகனம் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் பணி தொடங்கியது. இதனை பரமத்திவேலூரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் தொடங்கி வைத்தார்.

Update: 2021-06-01 18:13 GMT
பரமத்திவேலூர்:
காவலர் பல்பொருள் அங்காடி
நாமக்கல் மாவட்ட போலீசாருக்கான காவலர் பல்பொருள் அங்காடி நாமக்கல் போலீஸ் நிலையத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு மளிகை பொருட்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் போலீசாருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பல்பொருள் அங்காடிக்கு மாவட்டத்தில் உள்ள போலீசார் அல்லது அவர்களது குடும்பத்தினர் நேரில் சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
இந்தநிலையில் தற்போது கொரோனா 2-வது அலை காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் போலீசாருக்கு வேலை பழு அதிகரித்துள்ளது. இதனால் பல்பொருள் அங்காடிக்கு சென்று பொருட்கள் வாங்க சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக அங்காடிக்கு செல்ல போலீசாரின் குடும்பத்தினர் தயங்கி வந்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
இதுகுறித்து மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் தெரிவித்தார். அதன்பேரில், காவலர் பல்பொருள் அங்காடி பொருட்களை வாகனம் மூலம் போலீசாருக்கு விற்பனை செய்ய போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவிட்டார். அதன்படி போலீசாருக்கு மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் பணி நேற்று தொடங்கியது.
பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதியில் இந்த பணியை, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் தொடங்கி வைத்தார். அப்போது பரமத்திவேலூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட நல்லூர், ஜேடர்பாளையம், வேலகவுண்டம்பட்டி, பரமத்தி, வேலூர் உள்பட 7 போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். 
மகிழ்ச்சி
இதேபோல் காவலர் பல்பொருள் அங்காடி சார்பில் வாகனம் மூலம் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் பிற பகுதிகளில் உள்ள போலீஸ் குடியிருப்புகளுக்கு வாகனம் மூலம் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தெரிவித்தார்.
காவலர் பல்பொருள் அங்காடி சார்பில் வாகனம் மூலம் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால், போலீசாரின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்