நாமக்கல் மாவட்டத்தில் புதிய உச்சம்: கொரோனாவுக்கு 14 பேர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிய உச்சமாக கொரோனாவுக்கு 7 பெண்கள் உள்பட 14 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்:
14 பேர் சாவு
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 248 பேர் பலியாகி இருந்தனர்.
இந்தநிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நாமக்கல், ராசிபுரம் பட்டணம், திருச்செங்கோடு, நாமகிரிப்பேட்டை, குமாரபாளையம், ஒடுவன்குறிச்சி, திருச்செங்கோடு சின்னதம்பிபாளையம், ஜேடர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 7 பெண்கள் உள்பட 14 பேர் நேற்று ஒரே நாளில் இறந்தனர்.
பலி எண்ணிக்கை 262 ஆக உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 29-ந் தேதி அதிகபட்சமாக ஒரே நாளில் 13 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். இந்தநிலையில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 14 பேர் பலியாகி இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
கடந்த 5 நாட்களில் மட்டும் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 53 பேர் பலியாகி உள்ளனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ளது.