கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக மாநில மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது;
கிருஷ்ணகிரி:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கர்நாடக மதுபானங்களை தமிழகத்திற்கு கடத்துவதை தடுக்க ஓசூர் ஜூஜூவாடி, கிருஷ்ணகிரி மற்றும் மாவட்ட எல்லைகளில் மதுவிலக்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அறிவழகன், அர்ச்சுணன் உள்ளிட்ட சிறப்பு பிரிவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூருவிலிருந்து வந்த சரக்கு வாகனத்தில், தக்காளி, பேரல்களுக்குள் மறைத்து கடத்தி வந்த 11 பெட்டிகளில் இருந்த 528 மது பாக்கெட்டுக்கள் மற்றும் 2 பெட்டிகளில் இருந்த 40 டின் பீர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், வண்டியை ஓட்டி வந்த காவேரிப்பட்டணம் குண்டலப்பட்டியைச் சேர்ந்த அசோக் (வயது 22) காவப்பட்டியைச் சேர்ந்த தினேஷ் (21) ஆகியோரை கைது செய்தனர். கடத்தப்பட்ட மதுபானங்களின் மொத்த மதிப்பு ரூ.46 ஆயிரத்து 275 ஆகும்.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மது விலக்கு அமல் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.