கூடலூரில் தனியார் தேயிலை தொழிற்சாலைகளை 14 நாட்கள் மூட உத்தரவு

கூடலூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தனியார் தேயிலை தொழிற்சாலைகளை 14 நாட்கள் மூட நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.;

Update: 2021-06-01 17:40 GMT
கூடலூர்

கூடலூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தனியார் தேயிலை தொழிற்சாலைகளை 14 நாட்கள் மூட நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

கொரோனா பரவல்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்க மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், கிராமப்புற மற்றும் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களிடையே தொற்று பரவல் அதிகரித்தது. 

கூடலூர் பகுதியில் இதுவரை 51 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் கூடலூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக தொழிலாளர்களுக்கு காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக மட்டுமின்றி தனியார் தேயிலை தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் வேலைக்கு வருவதாகவும், இதனால் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

தொழிற்சாலைகள் 14 நாட்கள் மூடல்

இதன்பேரில், கூடலூர் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று தேயிலை தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தினர்.

 அப்போது கூடலூர் இரண்டாம் பகுதியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து தொழிற்சாலையை 14 நாட்கள் மூட நிர்வாகத்தினருக்கு ஆணையாளர் பாஸ்கரன் உத்தரவிட்டார்.

இதேபோல் நந்தட்டி, சில்வர் கிளவுட், மார்த்தோமா நகர் உள்பட பல இடங்களில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அங்கு வேலை பார்த்த தொழிலாளர்களின் பெயர் விவரங்களை சேகரித்தனர். 

இதில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்கள் வேலைக்கு வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்து 14 நாட்கள் தொழிற்சாலைகளை மூடும் படி அதன் நிர்வாகத்தினருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதேபோல பந்தலூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்