கூடலூரில் கொரோனா விதிகளை மீறிய ஆயுர்வேத மருந்து கடைக்கு சீல்
கூடலூரில் கொரோனா விதிமுறைகளை மீறிய ஆயுர்வேத மருந்து கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
கூடலூர்
கூடலூரில் கொரோனா விதிமுறைகளை மீறிய ஆயுர்வேத மருந்து கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 24-ந் தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், மருந்து கடைகள், பால் விற்பனை மையங்கள், வங்கிகள் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதையடுத்து பல்வேறு துறையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதித்து, எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
மருந்து கடைக்கு ‘சீல்’
இந்த நிலையில் கூடலூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் விதிமுறைகளை மீறி உணவு பொருட்கள் விற்பதாக நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் வந்தது.
இதைதொடர்ந்து நகராட்சி வருவாய் உதவியாளர் ஸ்ரீஜித் தலைமையிலான அதிகாரிகள் அந்த மருந்து கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு உணவு பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும் கடையில் இருந்தவர்கள் முககவசம் அணியாமல் இருந்தனர். தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள், விதிமுறைகளை மீறிய ஆயுர்வேத மருந்து கடைக்கு சீல் வைத்தனர்.
அபராதம்
கூடலூர் ஐந்து முனை சந்திப்பு பகுதியில் இருந்து பழைய பஸ் நிலையத்துக்கு செல்லும் மெயின் ரோட்டில் மளிகை பொருட்கள் மொத்த விற்பனை கடையில் ஆய்வு நடத்தினர்.
அப்போது அங்கு கடைக்குள் ஊழியர்கள் முககவசம் அணியாமல் மளிகை பொருட்களை மூட்டையாக கட்டிக்கொண்டிருந்தனர்.
இதையடுத்து முககவசம் அணியாமல் தொழிலாளர்ளை வேலையில் ஈடுபடுத்தியதாக கடை நிர்வாகத்தினருக்கு ரூ.10 அபராதம் விதிக்கப்பட்டது.