ஊரடங்கை மீறி உலாவரும் மக்கள்
விழுப்புரத்தில் ஊரடகை மீறி உலா வரும் மக்களால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமெடுத்து அதிதீவிரமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் இதுவரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதுபோல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையும் 250 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர ஒவ்வொரு நாளும் சராசரியாக 500 முதல் 600 பேர் வரை புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தளர்வில்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் விழுப்புரத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. போலீசாரும் ஆங்காங்கே முக்கிய சாலைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டதால் தேவையில்லாமல் யாரும் வெளியே செல்லவில்லை.
உலா வரும் இளைஞர்கள்
இந்நிலையில் ஊரடங்கில் வீட்டில் இருக்க முடியாத இளைஞர்கள் பலர் தங்களது இருசக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு சாலைகளில் உலா வருகின்றனர். மேலும் சிலர் கார்களில் வலம் வருகின்றனர்.
அவ்வாறு செல்பவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, ஊரடங்கு காலத்தில் எங்கு செல்கிறீர்கள் என்று விசாரிக்கும்போது, உறவினர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால் மருந்து வாங்க செல்கிறேன், அல்லது உணவு கொண்டு செல்கிறேன் என்றும், அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவினரை பார்க்க செல்வதாகவும், சிலர் பால் வாங்க செல்கிறேன், ஓட்டலில் பார்சல் உணவு வாங்க செல்கிறேன் என்று ஏதேதோ வாய்க்கு வந்த ஒரு காரணத்தை கூறி போலீசாரிடம் டிமிக்கி கொடுத்துவிட்டு அங்கிருந்து நைசாக தப்பித்து செல்கின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
இவ்வாறு அரசின் ஊரடங்கு உத்தரவை சிறிதும் மதிக்காமல் பொறுப்பற்ற முறையில் சாலைகளில் சுற்றித்திரியும் நபர்களின் கூட்டத்தினால் விழுப்புரம் நகரில் வாகன போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக விழுப்புரம் புதிய பஸ் நிலையம், நான்குமுனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம், காந்தி சிலை, ரெயில்வே நிலையம் அருகில், விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
இதை பார்க்கும்போது தற்போது தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறதா என்று நினைக்கக்கூடிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு ஏதேதோ காரணங்களை சொல்லிக்கொண்டு செல்லும் இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் சில சமயங்களில் போலீசாரும் திணறி வருகின்றனர். அரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் அதை மீறி தேவையின்றி சாலைகளில் பொதுமக்கள் சுற்றித்திரிவதால் கொரோனா தொற்று பெருந்தொற்றாக மாற வாய்ப்புள்ளதாகவும், இதே நிலைமை நீடித்தால் விரைவிலேயே கொரோனா 3-வது அலையும் பரவி விடும் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே அரசின் கட்டுப்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.