கோத்தகிரி அருகே தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு
கோத்தகிரி அருகே தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
கலெக்டர் ஆய்வு
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்கவும், பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் தொற்று கண்டறியப்படும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கோத்தகிரி அருகே கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களான கேரடா மட்டம், கஸ்தூரிபாய் நகர், சுள்ளிக்கூடு, கொட்ட நள்ளி, கேர்க்கம்பை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
அத்தியாவசிய பொருட்கள்
தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த 92 குடும்பங்கள், கோடநாடு கிராமத்தை சேர்ந்த 68 குடும்பங்கள் என மொத்தம் 160 பேருக்கு அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறிகள் அடங்கிய தொகுப்பை கலெக்டர் வழங்கினார்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உணவு தொகுப்பு வழங்கப்பட்டது. மேலும் கோடநாடு மற்றும் நெடுகுளா கிராம ஊராட்சிகளுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கும் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார்.
அப்போது கலெக்டர் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், தொற்று கண்டறியப்படும் நாள் முதல் 14 நாட்களுக்கு கிராமத்தை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை அந்தந்த பகுதிகளுக்கே கொண்டு சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது ஊட்டி உதவி கலெக்டர் மோனிகா ராணா, மாவட்ட உதவி வன அலுவலர் சரவணகுமார், கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.