தேனி மாவட்டத்தில் வாலிபர்கள் உள்பட 7 பேர் கொரோனாவுக்கு பலி
தேனி மாவட்டத்தில் வாலிபர்கள் உள்பட 7 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரசால் தினமும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்து 908 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டவர்களில் 1,136 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பினர். இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட 5 ஆயிரத்து 579 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஆண்டிப்பட்டியை சேர்ந்த 33 வயது வாலிபர், 70 வயது முதியவர், திண்டுக்கல்லை சேர்ந்த 24 வயது வாலிபர், கம்பத்தை சேர்ந்த 49 வயது பெண், அல்லிநகரத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஆகியோர் நேற்று அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதேபோல் கொரோனா பாதிப்புடன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற தேனி பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர், 63 வயது முதியவர் ஆகியோரும் உயிரிழந்தனர்.