எந்தெந்த நிறுவனங்கள் செயல்பட அனுமதி

எந்தெந்த நிறுவனங்கள் செயல்பட அனுமதி;

Update: 2021-06-01 16:24 GMT
எந்தெந்த நிறுவனங்கள் செயல்பட அனுமதி
கோவை

பால், பத்திரிகை வினியோகம்

கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழக அரசு அறிவித்து உள்ள ஊரடங்கு காலத்தில் இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டம் 144-ன் கீழ் வருகிற 7-ந் தேதி காலை 6 மணி வரை கோவை மாவட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் அறிவிக்கப்படுகிறது. இதன்படி முழு ஊரடங்கு காலத்தில் கீழ்க்கண்ட செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

மெடிக்கல்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள், பால் வினியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிகை வினியோகம், நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் வினியோகம், ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று மளிகை பொருட்களை விற்பனை செய்தல் உள்ளிட்டவற்றிற்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனு மதிக்கப்படுகிறது. 


ரேஷன் கடைகள், உணவகங்கள்

ரேஷன் கடைகள் அனைத்தும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படலாம். பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். 

உணவகங்களில் காலை 6 மணி முதல் பகல் 10 வரையிலும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். ஆன்லைன் மூலம் உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்படும். 

பிற பொருட்களை மின் வணிகம் மூலம் வினியோகம் செய்ய காலை 8 மணி முதல் மாலை 6 மணி செயல்படலாம். காய்கறிகள் மற்றும் பழங்கள் மொத்த விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் ஆனால் கடை களை திறந்து சில்லறை விற்பனை செய்யும் முறைக்கு தடை விதிக்கப் படுகிறது. 

செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம். குடிநீர் வழங்கல், சுகாதாரம், தொலைத் தொடர்பு மற்றும் அது தொடர்பான பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்துறை உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் இயங்கும்.

வீட்டில் இருந்து பணி

தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிவோர் வீட்டில் இருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 ஏ.டி.எம். தொடர்பான வங்கி சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடு பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும். 

ரத்த வங்கி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த சேவைகள் அனுமதிக்கப்படும்.
அவசர பயண நோக்கங்களுக்காக விசா வசதி மையங்கள் அந்தந்த மையங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளுடன் பயணிக்க அனுமதிக்கப்படக்கூடிய குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். 

கோழிப்பண்ணைகள், கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகள், கால்நடை ஆரோக்கியம் சார்ந்த பணிகளுக்கு அனுமதிக்கப்படும். விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையத்தில் கொண்டு வரப்படும் சரக்குகளை தொடர்புடைய குளிர்பதன கிடங்கு மற்றும் கொள்கலன் கிடங்குகளில் சேமிப்பு மற்றும் கொண்டு செல்லும் பணிகளுக்கு அனுமதிக்கப்படும்.

தொழிற்சாலை, ஏற்றுமதி நிறுவனங்கள்

கோவையில் கட்டுமான பணிகள், கட்டுமான வளாகத்தில் தங்கி இருக்கும் பணியாளர்களை கொண்டு செயல்படலாம். 

தன்னார்வலர் கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் இதர சேவைகள் செய்யும் நபர்கள் பயணம் செய்வதற்கு இ-பதிவு செய்திருக்க வேண்டும். 

தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணை படி நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முழு ஊரடங்கின் போதும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ஏற்றுமதி நிறுவனங்கள், மற்றும் ஏற்றுமதி ஆர்டர்கள் கைவசம் உள்ள விற்பனை நிறுவனங்கள் மற்றும் அத்தகைய நிறுவனங்களுக்கு பொருட்களை தயாரித்து வழங்கக்கூடிய விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களுக்கு கோவை மாவட்டத்தில் செயல்பட அனுமதியில்லை.

 செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரு மாத காலத்திற்குள் தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இ-பதிவு அனுமதி
உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் கோவை மாவட்டத்திற்கு வருகை தரவும் மற்றும் செல்வதற்கும் இ-பதிவு அனுமதிக்கப்படும். மருத்துவ காரணங்கள், இறப்பு மற்றும் இறப்பு தொடர்பான நிகழ்வுகளுக்கு மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவை இல்லை. 

இந்த தடை உத்தரவை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மைச்சட்டம் 2005-ன் கீழ் சட்டப்பிரிவுகள் 51 முதல் 60 வரை மற்றும் இந்திய தண்டனைச்சட்டம் சட்டப்பிரிவு 188-ன் கீழ் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்