தேனியில் உயிரை குடிக்கும் கொரோனாவால் பிணவறையில் குவிந்த உடல்கள்
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் உடல்கள் பிணவறையில் குவிந்தன. இதனால் அவற்றை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தேனி:
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் உடல்கள் பிணவறையில் குவிந்தன. இதனால் அவற்றை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா உயிரிழப்பு
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் 2-வது அலையாக உருவெடுத்தது. பலரையும் காவு வாங்கிய 2-வது அலையின் தாக்கம் தமிழகத்திலும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கொரோனா தொற்றால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்தது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருப்பினும் தினமும் பலரின் உயிரை கொரோனா எனும் கொடிய வைரஸ் குடித்து வருகிறது.
தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் கொரோனாவுக்கு பலர் இறந்துள்ளனர். அத்துடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறலுடன் தினமும் பலர் சிகிச்சைக்கு வருகிறார்கள். இதற்கிடையே கொரோனா பாதிப்புடன் சிகிச்சைக்கு வந்த போதிலும், சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு உயிரிழக்கும் நபர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
குவியும் பிணங்கள்
இதனால், கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த போதிலும், இணை நோய் அல்லது வேறு காரணங்களால் இறந்துள்ளதாக கணக்கில் வைக்கப்படுகிறது. இருப்பினும் அத்தகைய மரணங்களுக்கும் கொரோனாவுக்கு உயிரிழப்பவர்கள் உடலை போன்றே அடக்கம் அல்லது தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
கொரோனா தொற்றில் இருந்து மீண்டும் பலர் உயிரிழப்பதால், சில நாட்களாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பிணவறையில் உடல்கள் குவிந்து வருகின்றன. தினமும் சுமார் 20 பிணங்கள் வரை அங்கு வருகின்றன. கொரோனா பாதித்து உயிரிழந்தவர்கள் உடலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ள வழிகாட்டுதல்படி நோய் தொற்று ஏற்படாத வகையில் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
அடையாளம் காண்பதில் சிரமம்
இதற்காக உடல்கள் முறையாக கிருமி நாசினி தெளித்து, இதற்கான பிரத்யேக உறையில் வைத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். இதில் இறந்தவர்களின் முகம் மட்டும் தெரியும் வகையில் இருக்கும். பிணத்தை உறவினர்கள் அடையாளம் காண்பதிலும் சிக்கல் இருக்காது. ஆனால், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் உடலை வைப்பதற்கான உறைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் பிணங்கள் பிணவறையில் நேற்று குவிந்தன. அங்கு ஏராளமான பிணங்கள் பாலித்தீன் விரிப்புகளில் சுற்றி வைக்கப்பட்டன. அவற்றை உறவினர்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்தது. பிணத்தை எளிதில் அடையாளம் காண முடியாத சூழல் ஏற்பட்டதால், உறவினர்கள் ஒவ்வொரு பிணமாக அவிழ்த்து பார்த்து அடையாளம் காண வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஏற்கனவே துக்கத்தில் இருந்த உறவினர்களுக்கு இது கூடுதல் மன வலியை கொடுத்தது.
இதுபோன்ற பாதுகாப்பற்ற சூழல் உறவினர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயத்தை உருவாக்கி உள்ளது. எனவே, இறந்தவர்கள் பிணத்தை பாதுகாப்பான முறையிலும், எளிதில் அடையாளம் காணும் வகையிலும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.