சிறு சேமிப்பு பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய அக்காள்-தம்பி

உத்தமபாளையத்தை சேர்ந்த அக்காள்-தம்பி, தங்களது சிறு சேமிப்பு பணத்தை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினர்.

Update: 2021-06-01 16:09 GMT
உத்தமபாளையம்:
கொரோனா தடுப்பு பணிக்காக முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார். 
இதையடுத்து பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். இதை உத்தமபாளையத்தை சேர்ந்த ஆசிரியரான மாதவனின் பிளஸ்-2 படிக்கும் மகள் பாரதி, அவரது தம்பி 8-ம் வகுப்பு படிக்கும் பரிதி ஆகியோர் அறிந்து நிவாரண நிதி வழங்க முடிவு செய்தனர். 
அதன்பேரில் அவர்கள் இருவரும் தங்களின் சிறுசேமிப்பில் இருந்து தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்தனர். 
அதன்படி, ரூ.10 ஆயிரம் நிவாரண நிதியை உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. சக்திவேலிடம், பாரதியும், பரிதியும் வழங்கினர். அப்போது தாசில்தார் உதயராணி, துணை தாசில்தார் சுருளி ஆகியோர் உடன் இருந்தனர். அவர்கள் நிவாரண நிதி வழங்கிய அக்காள், தம்பியை பாராட்டினர்.

மேலும் செய்திகள்