மீன், இறைச்சி கடைகளில் மறைமுக விற்பனை அமோகம்
முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் மீன், இறைச்சி கடைகளில் மறைமுக விற்பனை அமோகமாக நடைபெற்றது.
பெரம்பலூர்:
கடைகள் மூடல்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் பரவலை கட்டுப்படுத்த தற்போது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடந்த 24-ந்தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கில் மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகளை திறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக பொதுமக்களுக்கு மளிகை, காய்கறிகள், பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தியதற்கு முந்தைய நாளான கடந்த 23-ந் தேதி மீன், இறைச்சி கடைகள் திறந்திருந்தன. அதன்பிறகு அந்த கடைகள் மூடப்பட்டதால் மீன், இறைச்சி விற்பனை செய்யப்படாமல் இருந்தது.
மறைமுக விற்பனை
பெரம்பலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலான வீட்டில் அசைவம் சமைப்பது வழக்கம். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரம்பலூர் மாவட்ட அசைவ பிரியர்கள் ஊரடங்கை மீறியும் போலீசார் கண்ணில் படாமலும் மீன், இறைச்சி கடைகளை தேடி அலைந்தனர்.
பெரம்பலூர் நகர்ப்பகுதியில் மீன், இறைச்சி கடைகள் சிலவற்றில் மறைமுக விற்பனை அமோகமாக நடைபெற்றது. அங்கு மீன், இறைச்சி ஆகியவற்றை பொதுமக்கள் வாங்கிச்சென்றனர். கிராமப்புறங்களில் சில மீன், இறைச்சி கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.