தற்காலிக தகனமேடை மூலம் உடல்கள் எரிப்பு
தஞ்சை ராஜா கோரி மயானத்தில் தற்காலிக தகனமேடை மூலம் உடல்கள் எரிக்கப்படுவதால் காத்திருக்க வேண்டிய நிலை இல்லை.
தஞ்சாவூர்:
தஞ்சை ராஜா கோரி மயானத்தில் தற்காலிக தகனமேடை மூலம் உடல்கள் எரிக்கப்படுவதால் காத்திருக்க வேண்டிய நிலை இல்லை.
ராஜா கோரி மயானம்
தஞ்சையில் இறந்தவர்களை தகனம் செய்யவும், புதைப்பதற்கும் பிரதான மயானமாக வடக்கு வாசல் அருகில் உள்ள ராஜாகோரி மயானம் உள்ளது. தற்போது கொரோனாவால் உயிரிழப்பவர்கள் மற்றும் உடல்நலம் குறைவால் இறப்பவர்கள் என அதிகம்பேரின் உடல்கள் தஞ்சை சுந்தரம்நகர் சாந்திவனம் மயானத்தில் எரிக்கப்படுவதால் அங்கே வரிசையில் உடல்களுடன் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
அப்படி காத்திருக்காமல் பலர் ராஜாகோரி மயானத்திற்கு உடல்களை கொண்டு வருகின்றனர். அந்த பெரிய மயானத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை தகனம் செய்ய தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மறுபுறம் உடல்நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக இறந்தவர்களை தகனம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்காலிக தகனமேடை
இப்படி தனித்தனியாக தகனம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் வரக்கூடிய உடல்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் உடல்களை காக்க வைக்காமல் உடனுக்குடன் எரிப்பதற்கு வசதியாக தற்காலிக தகனமேடை ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை காக்க வைக்காமல் உடனே எரியூட்டப்படுகிறது. இதற்காக பல டன் எடையுள்ள சவுக்கு கட்டைகள், வைக்கோல்கள் வாங்கி குவித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் சிமெண்டு தரையில் சவுக்கு கட்டைகள், செங்கற்கள் வரிசையாக அடுக்கி தற்காலிக தகனமேடை அமைக்கப்பட்டுள்ளன.
மயானத்தின் முதுநிலை பணியாளரான முன் களப்பணியாளர் பாலு மற்றும் அவரது உதவியாளர்கள், தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளைசெய்து முடிக்க சுறுசுறுப்பாக 15 இளைஞர்கள் என பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். இறந்து போனவர்களின் உறவினர்களே அருகில் வர பயப்படும் நிலையில், பரிவோடு அவர்களுடைய இறுதி நிகழ்வுகளை செய்து வருகின்றனர். இப்படி முன்னேற்பாடாக தற்காலிக தகனமேடை அமைக்கப்பட்டு இருப்பதால் இறந்தவர்களின் உடல்களோடு வருபவர்கள் காத்திருக்காமல் தங்களது இறுதிச்சடங்குகளை செய்துவிட்டு செல்கின்றனர்.