திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2021-05-29 19:08 GMT
திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள் மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளிலும் சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 
திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள 26 பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் திருச்சி ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நடந்தது. இதனை திண்டுக்கல் மாநகராட்சி நகர்நல அலுவலர் லட்சிய வர்ணா தொடங்கி வைத்தார்.
இதேபோல் திண்டுக்கல் பஸ் நிலையம், ஆர்.எம் காலனி, சந்தை ரோடு உள்பட 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் சுமார் ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் தெரிவித்தார்.
மேலும் திண்டுக்கல்லில் பணியாற்றும் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம், சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. 
இதற்கு போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தலைமை தாங்கினார். இதில் துணை சூப்பிரண்டு மணிமாறன், வட்டார மருத்துவ அலுவலர் சீனிவாசன் மற்றும் மருத்துவ அலுவலர்கள் பங்கேற்றனர். 
இந்த முகாமில் திண்டுக்கல்லில் பணியாற்றும் போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டு கொண்டனர். இதில் மொத்தம் 408 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.  இதேபோல் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட முகாம்களில் நேற்று ஒரேநாளில் 6 ஆயிரத்து 235 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் செய்திகள்