நிலக்கோட்டையில் உணவுக்கு தவித்த தம்பதிக்கு உதவிக்கரம் நீட்டிய போலீசார்
நிலக்கோட்டையில் உணவுக்கு தவித்த தம்பதிக்கு போலீசார் உதவிக்கரம் நீட்டி அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர்.;
நிலக்கோட்டை:
ஊரடங்கு காலத்தில் உணவு கிடைக்காமல் தவிக்கும் மக்கள் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையை தொடர்பு கொள்ளலாம் என்றும், அதற்காக அவசர அழைப்பு அறையின் தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நிலக்கோட்டையை சேர்ந்த பிச்சை மனைவி ரோகிணி (வயது 65) ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி உணவு கிடைக்காமல் தவிப்பதாக மாவட்ட காவல் துறை அவசர அழைப்புக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.
இதையடுத்து ரோகிணிக்கு உதவி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் துறை சார்பில் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகனுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து அவர் நிலக்கோட்டை காமராஜர் நகரில் குடியிருக்கும் பிச்சையின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்தார். இதில், பிச்சை கொடைக்கானலில் காவலாளியாக வேலை பார்ப்பதாகவும், தற்போது ஊரடங்கு என்பதால் அந்த வேலைக்கு போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், தனது சொந்த செலவில் ரோகிணிக்கு அத்தியாவசிய பொருட்களுடன் ரூ.2,000 வழங்கினார். அப்போது அவருக்கு பிச்சை, அவரது மனைவி ரோகிணி நன்றி தெரிவித்தனர்.