பரமத்திவேலூர் அருகே ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட 3 டீக்கடைகளுக்கு ‘சீல்’; 40 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
பரமத்திவேலூர் அருகே ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட 3 டீக்கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், 40 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பரமத்திவேலூர்:
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின்போது மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மருத்துவ தேவை தவிர பிற காரணங்களுக்கு வெளியே செல்லவும் தடை விதித்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி திறந்திருக்கும் கடைகள் சீல் வைக்கப்படும் எனவும், தேவையின்றி வெளியே சுற்றினால் வழக்குப்பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஊரடங்கு அடுத்த மாதம் (ஜூன்) 7-ந் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும்.
ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் காய்கறி, பழங்கள் பொதுமக்களின் பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், மளிகை பொருட்களும் பொதுமக்களின் வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்திலும் காய்கறி, மளிகை பொருட்கள் பொதுமக்களின் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
3 டீக்கடைகளுக்கு சீல்
இந்தநிலையில் பரமத்திவேலூர் அருகே உள்ள பாலப்பட்டியில் அரசின் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி டீக்கடைகள் செயல்படுவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது பாலப்பட்டியில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி 3 டீக்கடைகள் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஒரு ஓட்டலில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வாடிக்கையாளர்களுக்கு உணவுகள் வினியோகிக்கப்பட்டதும் தெரிந்தது. இதையடுத்து 3 டீக்கடைகள், ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் 4 கடைகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் போலீசார் அபராதம் விதித்தனர்.
40 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
இதனிடையே பரமத்தி, பாலப்பட்டி, ஜேடர்பாளையம், பரமத்திவேலூர் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதன்படி 40-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், வரும் காலங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.