அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் கூடுதலாக 100 படுக்கைகள் ஏற்படுத்த வேண்டும்; தேசிய நலக்குழும திட்ட இயக்குனர் உத்தரவு
நாமக்கல் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் கூடுதலாக 100 படுக்கைகளை ஏற்படுத்த வேண்டும் என தேசிய நலக்குழும திட்ட இயக்குனர் டாக்டர் தாரேஸ் அகமது உத்தரவிட்டு உள்ளார்.
நாமக்கல்:
அதிகாரி ஆய்வு
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டு அறையை, கலெக்டர் மெகராஜ் முன்னிலையில் மாநில கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தேசிய நலக்குழும திட்ட இயக்குனர் டாக்டர் தாரேஸ் அகமது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது பதிவேடுகளில் குறித்து வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்புகளின் விவரங்களையும், நோயாளிகளின் தொலைபேசி அழைப்பின் பேரில் மருத்துவமனைகள், கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் படுக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளதையும் பார்வையிட்டார்.
மேலும் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளின் உடல் நிலை குறித்து சம்பந்தப்பட்ட நோயாளிகளிடம் தொடர்பு கொண்டு விசாரணை செய்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதையும் டாக்டர் தாரேஸ் அகமது பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கூடுதல் படுக்கை வசதி
நாமக்கல் மாவட்டத்தில் நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்து அதனடிப்படையில், உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் 100 படுக்கைகளை கூடுதலாக ஏற்படுத்த வேண்டும். கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்பட 400 கூடுதல் படுக்கைகளை உடனடியாக உருவாக்கவும் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சித்ரா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் ரமேஷ், பேரிடர் மேலாண்மை தாசில்தார் பச்சைமுத்து மற்றும் டாக்டர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.