கோவையில் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் விலை உயர்வு

கோவையில் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் விலை உயர்வு;

Update: 2021-05-29 18:04 GMT
கோவை

கொரோனாவால் பயன்பாடு அதிகரித்து உள்ளதால் கோவையில் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் விலை உயர்ந்து உள்ளது.

கொரோனா பாதிப்பு

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து மாநில அளவில் முதல் இடத்தில் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப் படும் 60 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது.

 இந்த நிலையில் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை கண்டறிய பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவி உதவுகிறது. இதை ஒருவரின் விரலில் பொருத்தி ஆக்சிஜன் அளவை அறிய முடியும்.

ஆக்சிஜன் அளவை பார்ப்பதற்காக கோவையில் ஆன்லைன் மற்றும் மருந்து கடைகளில் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவியை மருத்துவமனை மட்டுமின்றி தொழிற்சாலை உள்பட பல்வேறு இடங்களிலும் பயன்படுத்தி வருகின்றனர்.

விலை அதிகரிப்பு

இதனால் அந்த கருவியின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அந்த கருவியின் விலையும் உயர்ந்து வருகிறது. முன்பு ரூ.700 முதல் ரூ.1000 -க்கு விற்கப்பட்ட பல்ஸ்ஆக்ஸிமீட்டர் தற்போது ரூ.1300 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. 

ஆனாலும் கோவை மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகளில் இந்த கருவி விற்பனை அதிகமாகவே உள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது

94 சதவீதம்

உடலில் ஆக்சிஜன் அளவை கண்டறிய பல்ஸ்ஆக்ஸிமீட்டர் கருவி பயன்படுகிறது. இதை பயன்படுத்துவதற்கு முன்பு கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். 

ஆள்காட்டிவிரல் அல்லது நடுவிரலில் கருவியை பொருத்த வேண்டும். பின்னர் நிதானமாக அமர்ந்து அளவை சரியாக கணக்கிட வேண்டும். 

கருவியில் ஆக்சிஜன் அளவும் நாடித் துடிப்பும் சீராக தெரியும் வரை காத்திருக்க வேண்டும். ஆக்சிஜன் அளவு 94 சதவீதத்திற்கு கீழ் இருந்தால் மற்ற விரல்களில் அந்த கருவியை பொருத்தி பார்க்க வேண்டும். 

தொடர்ந்து 94 சதவீதத்துக்கு குறைவாக இருந்தால் சம்மந்தப்பட்டவரை மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கையில் அனுமதிக்க வேண்டும். 

ஆக்சிஜன் அளவு 80 சதவீதத்துக்கு கீழ் சென்றால் காப்பாற்றுவது கடினமாகிறது. எனவே இந்த விஷயத்தில் கொரோனா நோயாளிகள் உஷாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்