வாகனங்கள் செல்வதை தடுக்க ரெயில்வே சுரங்கப்பாதை மண் கொட்டி அடைப்பு

தர்மபுரியில் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த, கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை முன்பு மண் கொட்டி இந்த பாதையை அடைத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2021-05-29 17:31 GMT
தர்மபுரி:
தர்மபுரியில் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த, கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை முன்பு மண் கொட்டி இந்த பாதையை அடைத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ரெயில்வே சுரங்கப்பாதை
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. 
தர்மபுரி நகரம் மற்றும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகளில் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக வாகனங்களில் செல்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. 
மண் கொட்டி அடைப்பு
தர்மபுரி நகர், வெண்ணாம்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மற்றும் பைபாஸ் சாலை ஆகிய பகுதிகளுக்கு சென்று வருவோர் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி வருகிறார்கள். முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும் இந்த சுரங்கப்பாதையில் மோட்டார் சைக்கிள்களில் அதிகளவில் மக்கள் சென்று வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க, இந்த ரெயில்வே சுரங்கப்பாதையின் நுழைவு பகுதி தற்போது மண் கொட்டப்பட்டு மோட்டார் சைக்கிள்கள் செல்ல முடியாத வகையில் பாதை அடைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் சுரங்க பாதையை பயன்படுத்தி வந்தவர்கள் சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் அல்லது ஒட்டப்பட்டி ரெயில்வே கேட் ஆகிய பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து தர்மபுரி நகர் மற்றும் கலெக்டர் அலுவலக பகுதிகளுக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
இதன் மூலம் இந்த பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் தேவையில்லாமல் செல்வது தடுக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்