சரக்கு லாரிகளை தொடாமல் கண்ணாடியால் சோதனை
கூடலூர்-கர்நாடக எல்லையில் கொரோனா பரவலை தடுக்க சரக்கு லாரிகளை தொடாமல் கண்ணாடியால் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களின் எல்லைகள் உள்ளது. இங்கு சோதனைச்சாவடிகள் அமைத்து காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா பரவலால் தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகன போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவிற்கு ஏராளமான சரக்கு லாரிகள் சென்று வருகின்றன. ஆனால் அதில் மது பாட்டில்களை மறைத்து கடத்துவது அதிகரித்தது. இதை கருத்தில் கொண்டு வாகன சோதனையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலும் லாரிகள் மீது ஏறி சோதனை நடத்துகின்றனர். அப்போது அவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் காணப்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் லாரிகளை தொடாமல் கண்ணாடிகளை பயன்படுத்தி போலீசார் சோதனை நடத்துவதை தொடங்கி உள்ளனர்.
இதன் மூலம் லாரிகளுக்கு அடியில் வைத்து மது உள்ளிட்ட கடத்தல் பொருட்கள் கொண்டு செல்வதையும் கண்டுபிடிக்க முடிகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.