கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற தண்டனை கைதி சாவு
வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் குண்டர் சட்டத்தில் தண்டனை அனுபவித்து வந்த திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் என்பவர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.;
வேலூர்
வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் குண்டர் சட்டத்தில் தண்டனை அனுபவித்து வந்த திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் என்பவர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தண்டனை கைதி
வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் ஜெயிலில் விசாரணை, தண்டனை கைதிகள் என்று 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு கடந்த பிப்ரவரி மாதம் திருப்பத்தூர் மாவட்டம் கவுதம்பேட்டையை சேர்ந்த சங்கர் (வயது 62) என்பவர் கொலை வழக்கு ஒன்றில் திருப்பத்தூர் டவுன் போலீசாரால் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டார். அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் காணப்பட்டதால் ஓராண்டு ஜாமீனில் வர முடியாத குண்டர் சட்டம் பாய்ந்தது.
சுவாசக்கோளாறு, ரத்தகொதிப்பு உள்பட பல்வேறு நோய்களால் சங்கர் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சங்கருக்கு கடந்த 6-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையடுத்து ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கொரோனாவுக்கு சிகிச்சை
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முதற்கட்டமாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கொரோனா பரிசோதனையின் முடிவில் அவருக்கு தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து கொரோனா சிறப்பு வார்டில் சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி சங்கருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தது.
அதையடுத்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு சுவாசப்பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சங்கர் உயிரிழந்தது குறித்து அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.