கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா 2-வது தவணை தடுப்பூசி போட நேற்று ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.;

Update: 2021-05-29 16:54 GMT
கடலூர், 


தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உக்கிரமாக இருக்கிறது. இதனால் தினசரி தொற்றுக்கு ஆளாபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது.  கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு குறைய தொடங்கி இருப்பது மனதுக்கு ஒரு ஆறுதலான ஒன்றாகும்.

 அதே வேளையில் இறப்பு என்பது தொடர்ந்து அதிகமாகவே பதிவாகி வருவது வேதனையை அளிப்பதாக இருக்கிறது. தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கு உத்தரவு, அடுத்த மாதம் (ஜூன்) 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவுக்கு எதிராக தற்போது இருக்கும் ஓர் பேராயுதம் தடுப்பூசி மட்டுமே. தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டிய மக்கள், தற்போது அதிகளவில் ஆர்வத்துடன் வந்து போட்டுக்கொள்கிறார்கள். 

ஆனால் மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை கொடுக்க முடியாத நிலையில் தான் இன்றைய சூழல் இருக்கிறது.   அந்த வகையில், கடலூர் மாவட்ட மக்கள் தற்போது கொரோனா தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. 

தடுப்பூசி

அந்த வகையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை 8 மணிக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக பொதுமக்கள் குவிய தொடங்கினர். இதில் 
கோவிஷீல்டு தடுப்பூசியை பொறுத்தவரை முதல் மற்றும் 2-வது டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால் கோவாக்சினுக்கு  தட்டுப்பாடு இருப்பதால் அதில் 2-வது டோஸ் போட இருப்பவர்களுக்கே முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்பட்டது.

முன்னுரிமை

இதனால் கோவாக்சின் முதல் டோஸ் தடுப்பூசி போடுவதற்காக வந்திருந்த சிலர் அங்கிருந்து திரும்பி சென்றனர். 2-வது டோஸ் தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி  போட்டுக்கொண்டனர்.

இதேபோல் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தவர்களிடம்  செவிலியர்கள், பொதுமக்களிடம் ஆதார் அட்டை எண் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு தடுப்பு மருந்து போட்டனர். நேற்று மட்டும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 500-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்