மூங்கில்துறைப்பட்டு சங்கராபுரம் பகுதியில் சாராயம் கடத்தல் 9 பேர் கைது
மூங்கில்துறைப்பட்டு மற்றும் சங்கராபுரம் பகுதியில் சாராயம் கடத்தி வந்ததாக 9 பேரை கைது செய்த போலீசார் ஒரு ஆட்டோ, 4 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு
அரும்பராம்பட்டு சாலை
மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் அரும்பராம்பட்டு சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த அரும்பராம்பட்டு பகுதியைச் சேர்ந்த மணி(வயது 58), திருவண்ணாமலை மாவட்டம் தொண்டாமனூர் சக்கரபாணி மகன் ராஜா(38) மற்றும் பெருங்களத்தூர் தொப்பளான் மகன் சுதாகர்(29) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், 55 லிட்டர் சாராயம் ஆகிவற்றை பறிமுதல் செய்தனர்.
ஆட்டோவில் சாராயம்
வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரங்கப்பனூர் சேராப்பட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் சாராயம் கடத்தி வந்த புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் ஆனந்த்(22), குழந்தை மகன் ஏழுமலை(30) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 55 லிட்டர் சாராயம் மற்றும் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
லாரி
அதேபோல் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமால், ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் பழையபாலப்பட்டு, தெத்துக்காடு சோதனை சாவடிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பழையபாலப்பட்டு அருகே மோட்டார் சைக்கிளில் 2 லாரி டியூப்களில் சாராயம் கடத்தி வந்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்த மார்க்ஸ்லெனின்(37), வெள்ளேரிக்காடு சென்னப்பன்(29) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் 110 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
மேலும் விரியூர் கிராமத்தை சேர்ந்த சிவா(24) மற்றும் ஜான்சன்ராஜ்(20) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் லாரி டியூப்பில் சாராயத்தை கடத்தி வந்தபோது தெத்துகாடு சோதனை சாவடி அருகில் அவர்களை மடக்கி பிடித்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.