தஞ்சையில் செல்போன் பழுதுபார்க்கும் கடையில் திருட்டு - போலீசார் விசாரணை
தஞ்சையில் செல்போன் பழுதுபார்க்கும் கடையில் திருடி சென்ற மர்மநபர்களை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்தவர் முகமது இன்சியாஸ் (வயது40). இவர் தஞ்சை பர்மாபஜாரில் செல்போன் பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக கடந்த 1 வாரமாக கடை பூட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் செல்போன் கடையின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பழுது பார்ப்பதற்காக கொடுக்கப்பட்டிருந்த 10 செல்போன்களை திருடிச் சென்று விட்டனர்.
இவற்றின் மதிப்பு ரூ.25 ஆயிரம் இருக்கும். இந்தநிலையில் அந்த வழியாக சென்ற சிலர், கடையின் கதவு திறந்து கிடப்பதாக முகமது இன்சியாசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது கடைக்குள் இருந்த பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன. பழுது பார்க்க வந்திருந்த செல்போன்கள் திருடி செல்லப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் அதே பகுதியில் உள்ள 2 செல்போன் கடைகளில் மர்மநபர்கள் திருட முயற்சி செய்துள்ளனர். அந்த கடைகளின் மையப்பகுதியில் இருந்த பூட்டுகளை உடைக்க முடியாததால் அந்த கடைகளில் இருந்த பொருட்கள் தப்பின.