தஞ்சை மாவட்டத்தில், இதுவரை கருப்பு பூஞ்சை நோய்க்கு 23 பேர் பாதிப்பு - அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயினால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தஞ்சையில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில், தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோய் பரவி வருகிறது. வடமாநிலங்களில் இந்த நோய்த்தொற்று பரவலாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
கருப்பு பூஞ்சை நோயை தமிழக அரசும் தொற்று நோயாக அறிவித்துள்ளது. இந்த நோய் பாக்டீரியா, வைரஸ் போன்ற காற்று மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள பூஞ்சை கிருமிகள் மூலம் நாசி வழியாக உடலுக்குள் சென்று தொற்றை ஏற்படுத்துகின்றன. இந்த தொற்று முதல் முதலில் கண்களை பாதிக்கிறது. உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இந்த நோய் தொற்று தாக்குகிறது. தற்போது கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை இந்த நோய் எளிதில் தாக்குகிறது.
தஞ்சை மாவட்டத்திலும் இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 19 பேரும், தனியார் மருத்துவமனையில் 4 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.