1,697 பேருக்கு மட்டுமே கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 1,697 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா தொற்று பாதிப்பு 2வது நாளாக குறைந்தது. இதுபோல் சிகிச்சை பலனின்றி 20 பேர் பலியாகினர்
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 1,697 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா தொற்று பாதிப்பு 2வது நாளாக குறைந்தது. இதுபோல் சிகிச்சை பலனின்றி 20 பேர் பலியாகினர்.
1,697 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருகிற 7-ந் தேதி வரை முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கிலும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 30 ஆயிரத்து 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு இருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 1,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
20 பேர் பலி
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் வரும் வரை வீடுகளில் அவர்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 54ஆக உயர்ந்துள்ளது.
இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 945 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 980ஆக உள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 17 ஆயிரத்து 628 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 ஆண்கள், 10 பெண்கள் என 20 பேர் பலியாகினர். தற்போது பலி எண்ணிக்கை 446ஆக உள்ளது.
தொற்று குறைந்து வருகிறது
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்திலும் பாதிப்பு குறைந்து வருகிறது. அதன்படி கடந்த 27ந் தேதி 2074 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 28-ந் தேதி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிண்கை 1,823 ஆகவும், நேற்று அதை விட குறைந்து 1,697 ஆகவும் இருந்தது. இதனால் மக்கள் மத்தியில் நிம்மதி எழுந்துள்ளது. வரும் நாட்களில் தொற்று மேலும் குறையும் என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
17 ஆயிரத்து 301 பேருக்கு
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 17 ஆயிரத்து 301 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 43 ஆயிரத்து 975 பேருக்கு கடந்த 10 நாட்களில் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 39 சதவீதத்தினருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால், மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பேர் வரை மாவட்டம் முழுவதும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இவர்களுக்கான பரிசோதனை முடிவையும் விரைவாக வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
----