கொள்முதலுக்கு பணம் அனுப்பியும் பொருள் அனுப்பாமல் ஏமாற்றிய ராஜஸ்தான் வியாபாரி மீது மோசடி வழக்கு - மயிலாடுதுறை போலீசார் நடவடிக்கை
கொள்முதலுக்கு பணம் அனுப்பியும் பொருள் அனுப்பாமல் ஏமாற்றிய ராஜஸ்தான் வியாபாரி மீது மோசடி வழக்கு பதிவு செய்து மயிலாடுதுறை ேபாலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை திருவிழந்தூர், நீடூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரகு (வயது 36). இவர் மயிலாடுதுறை பகுதியில் மளிகை பொருளான மல்லி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
இவர்், கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி முதல் ஏப்ரல் 14-ந் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் அக்ரோ புராடக்ட் நிறுவனம் நடத்திவரும் பிரசாந்த் குப்தா என்பவருக்கு, மல்லி கொள்முதல் செய்வதற்காக முதலில் ரூ.2 லட்சம், பின்னர் ரூ.12 லட்சத்து 17 ஆயிரம் என ரூ.14 லட்சத்து 17 ஆயிரம் அளவில் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் வங்கி மூலம் ரகு பணம் அனுப்பியுள்ளார்.
பணம் அனுப்பியும் பிரசாந்த் குப்தா, மல்லியை அனுப்பாததால் அதிர்ச்சி அடைந்த ரகு, மயிலாடுதுறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரணை செய்த மயிலாடுதுறை மாஜிஸ்திரேட் கோர்ட்டு நீதிபதி ரிசானா பர்வீன், ராஜஸ்தானை சேர்ந்த பிரசாந்த் குப்தா மீது மோசடி வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
அதன் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் ராஜஸ்தானை சேர்ந்த பிரசாந்த்குப்தா மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.