போலீசாரை தலைதெறிக்க ஓடவிட்ட கொரோனா நோயாளிகள்

தேனியில் வாகன தணிக்கையின் போது கொரோனா நோயாளிகள், போலீசாரை தலைதெறிக்க ஓடவிட்ட சம்பவங்கள் அரங்கேறின.

Update: 2021-05-29 12:18 GMT
தேனி:

கொரோனா நோயாளி

தேனி மாவட்டத்தில் ஊரடங்கு விதியை மீறுவோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்காக மாவட்டத்தில் 42 இடங்களில் வாகன தணிக்கை நடந்து வருகிறது.

அந்த வகையில் தேனியில் போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்தனர். அந்த வாலிபர் தான் மருந்துக்கடைக்கு செல்வதாக கூறினார். 

ஆனால், போலீசார் இதேபோன்று பலர் சொல்லி செல்வதாக கூறி அந்த வாலிபரை தேனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவருடைய மோட்டார் சைக்கிளையும் அங்கு கொண்டு சென்றனர். 

சிறிது நேரத்தில் அந்த வாலிபர், தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்று கூறி அதற்கான சான்றை காண்பித்தார். இதனை பார்த்து, போலீசார் விலகி ஓடினர். 

சிறிது தூரம் சென்று அவருடைய மோட்டார் சைக்கிள் சாவியை தூக்கி வீசி, உடனடியாக வண்டியை எடுத்துவிட்டு செல்லுமாறு கூறினர். அந்த வாலிபரும், தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

நேரடியாக சந்திப்பு 

சில நாட்களாக வாகன தணிக்கையின் போது கொரோனா நோயாளிகளை போலீசார் நேரடியாக சந்திக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மருந்து, மாத்திரைகள் வினியோகம் செய்யவில்லை. இதற்காக அரசு ஒதுக்கீடு செய்த மருந்து பெட்டகம் தீர்ந்து போனதோடு, புதிதாக மருந்து பெட்டகமும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால், கொரோனா பாதித்த நோயாளிகள் மருந்து கடைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.

தலைதெறிக்க ஓடும் போலீசார்
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்கள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற பயத்தில் தனிமைப்படுத்தும் விதிகளை தூக்கி எறிந்து விட்டு, மருந்துக்கடைகளை நோக்கி படையெடுக்கின்றனர். 

இவ்வாறு பயணம் செய்யும் நபர்கள் போலீசாரின் வாகன தணிக்கையிலும் சிக்கிக் கொள்கின்றனர். 

அவ்வாறு சிக்கிக் கொள்ளும் போது, தாங்கள் கொரோனா நோயாளிகள் என்று ஆவணங்களை காட்டி போலீசாரை தலைதெறிக்க ஓட்டம் பிடிக்க வைக்கும் சம்பவங்கள் சில நாட்களாக நடந்து வருகிறது. இதனால், வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்