கருங்கன்னியில், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சந்தரநதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி மீ்ண்டும் தொடங்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

கருங்கன்னியில், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சந்தரநதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி மீண்டும் தொடங்கப்படுமா? என விவசாயிகள எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2021-05-29 11:50 GMT
வேளாங்கண்ணி, 

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய பகுதியில் திருக்குவளை அருகே வெள்ளையாற்றில் இருந்து ஏற்வைகாடு என்ற இடத்தில் இருந்து பிரிந்து சந்தரநதி ஆறு செல்கிறது. இந்த ஆறு ஏற்வைகாடு, மேல வாழக்கரை, வாழக்கரை, மடப்புரம், மீனம்பநல்லூர், கருங்கன்னி, மேலபிடாகை, பிரதாபராமபுரம், திருப்பூண்டி, காரப்பிடாகை உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசன வாய்க்காலாகவும், வடிகாலாகவும் உள்ளது. இந்த ஆறு வேதாரண்யம் கால்வாயில் கலந்து கடலில் கலக்கிறது.இந்த பகுதி டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியாக உள்ளது.சந்தரநதி ஆறு மூலம் இந்த பகுதியில் 2,000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த நிலையில் கருங்கன்னியில் சந்தரநதியின் குறுக்கே இருந்த பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. தூண்கள் அமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டன. திடீரென பாலம் கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. நீண்ட நாட்களாக பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பாலத்தின் வழியாக மேலப்பிடாகையில் இருந்து கருங்கன்னி, சோழவித்யாபுரம், பெரியதும்பூர், சின்னத்தும்பூர் கிராமத்துமேடு, வடவூர் வழியாக நாகைக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளது. இந்த சாலை கடற்கரை சாலைக்கு இணைப்பு சாலையாக உள்ளது.

மேட்டூர் அணையில் விவசாயத்திற்கு ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அணையில் தண்ணீர் இருப்பு உள்ளதாலும், அவ்வப்போது மழை பெய்து வருவதாலும் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படலாம் என விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொள்ள கோடை உழவு போன்ற முன் கட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாலம் கட்டிமுடிக்கப்படவில்லை என்றால் ஏர்வைகாடு தடுப்பணையிலேயே தண்ணீரை தேக்கி வைக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் விவசயிகள் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்குள் பாலம் கட்டும் பணியை மீண்டும் தொடங்கி விரைவில் கட்டி முடிக்க வேண்டுமு் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்