கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை வர்த்தக மையத்தில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 800 படுக்கைகள் தயார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 800 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.;

Update: 2021-05-29 00:17 GMT
சென்னை,

முதல்-அமைச்சர் கடந்த 7-ந்தேதியன்று சென்னை வர்த்தக மையத்திற்கு நேரடியாக சென்று ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார்.

அதன் தொடர்ச்சியாக பணிகள் துரிதப்படுத்தப்பட்டு முதற்கட்டமாக 360 படுக்கைகள் கொண்ட முதல் பிரிவு உடனடியாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த முதல் பிரிவில் மொத்தமுள்ள 360 படுக்கைகளில் 300 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளன. இம்மையத்தில் கடந்த 11-ந்தேதியன்று முதல் நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு தற்போது கொரோனா தொற்று பாதித்த 256 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

800 படுக்கைகள் தயார்

வர்த்தக மையத்தில் 2-வது பிரிவில் 504 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் தயார்நிலையில் உள்ளது. இதில் 500 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 800 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன.

இந்த சிகிச்சை மையத்தில் அரசு பொது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று குறைந்த அளவு ஆக்சிஜன் இணைப்புடன் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டிய நபர்கள் ஆஸ்பத்திரியின் அறிவுறுத்தலின்படி, இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரசு பொது ஆஸ்பத்திரிகளிலிருந்து டாக்டர்களின் பரிந்துரையின்படி அல்லது மாநகராட்சியின் முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்களில் உள்ள டாக்டர்களின் பரிந்துரையின்படி மட்டுமே இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ஆக்சிஜன் சேமிப்பு கலன்கள்

சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் 11 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆக்சிஜன் சேமிப்பு கலன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்சிஜன் சேமிப்பு கலன்கள் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் சார்பில் நிறுவப்பட்டுள்ளது. இம்மையத்தில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அனைவருக்கும் மூன்று வேளையும் விலையில்லாமல் தரமான உணவு சென்னை மாநகராட்சியின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளும் மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள், நர்சுகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

13¾ லட்சம் பேருக்கு தடுப்பூசி

கொரோனா நோய்த்தொற்றை தடுக்க சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். அதன்படி, இதுவரை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முதல் தவணை மற்றும் 2-வது தவணை என 19 லட்சத்து 48 ஆயிரத்து 837 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி முதல் தவணையாக 10 லட்சத்து 99 ஆயிரத்து 608 டோஸ்களும், 2-வது தவணையாக 3 லட்சத்து 77 ஆயிரத்து 454 டோஸ்களும், ‘கோவேக்சின்’ முதல் தவணையாக 2 லட்சத்து 79 ஆயிரத்து 755 டோஸ்களும், 2-வது தவணையாக 1 லட்சத்து 92 ஆயிரத்து 20 டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 13 லட்சத்து 79 ஆயிரத்து 363 பேர் பயன் அடைந்து இருக்கின்றனர்.

மேலும் செய்திகள்