கொரோனாவால் இறப்பவர்கள் எண்ணிக்கையை அரசு குறைத்து காட்டுகிறது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
சேலம்:
தமிழகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்து காட்டி வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
டாக்டருடன் ஆலோசனை
முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சேலம் மாவட்டத்தில் தனது தொகுதிக்குட்பட்ட எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் அவர் அங்கு முதன்மை டாக்டர் சரவணகுமாரிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவரிடம், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் எவ்வளவு உள்ளன என்பன உள்ளிட்ட விவரங்களையும் கேட்டறிந்தார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பயணியர் மாளிகைக்கு சென்றார். அங்கு எடப்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்கள் 210 பேருக்கு கொரோனா நிவாரண உதவியாக ரூ.1,500 மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை அவர் வழங்கினார். அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆக்சிஜன் படுக்கைகள்
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் முழுவதும் நிரம்பி இருக்கின்றன. எனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற கூடுதலாக படுக்கை வசதிகளை விரைவில் செய்து கொடுக்க வேண்டும்.
சேலம் இரும்பாலையில் அமைக்கப்பட்ட 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஒரு வாரத்தில் செயல்பாட்டுக்கு வரும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்தார். ஆனால் இன்னும் அது செயல்பாட்டுக்கு வரவில்லை. எனவே துரிதமாக செயல்பட்டு இரும்பாலையில் அமைக்கப்பட்டுள்ள 500 ஆக்சிஜன் படுக்கைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
தவறான புள்ளி விவரங்கள்
நான் முதல்-அமைச்சராக இருந்தபோது அ.தி.மு.க. அரசால் ஏற்படுத்தப்பட்ட ஆக்சிஜன் படுக்கைகள் வசதி தான் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் இருக்கின்றன. சங்ககிரியில் மட்டும் 20 படுக்கை வசதிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல மாவட்டத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் 3,800 படுக்கைகள் தான் உள்ளன. ஆனால் 11,500 படுக்கைகள் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. உண்மையை மறைத்து தவறான புள்ளி விவரங்களை கொடுத்துகொண்டு இருக்கிறார்கள்.
மாவட்ட கலெக்டர், ஒவ்வொரு தொகுதியிலும் எந்ெதந்த இடத்தில் எவ்வளவு படுக்கைகள் இருக்கின்றன என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும். அதேபோல் அரசு ஆஸ்பத்திரிகளில் தினந்தோறும் ஆக்சிஜன் படுக்கை வசதி உள்ள படுக்கைகள் எத்தனை நிரம்பி உள்ளன, எவ்வளவு காலியாக உள்ளன என்பது தெரிந்தால் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த ஆஸ்பத்திரிகளை நாடி சென்று அவர்கள் சிகிச்சை பெற முடியும். இதை மாவட்ட கலெக்டர் அறிவிக்க வேண்டும்.
பரிசோதனை மையங்கள்
அ.தி.மு.க. ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 87 ஆயிரம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதற்கான முடிவுகளை 24 மணி நேரத்தில் தெரிவிக்கப்பட்டது. இன்றைக்கு அதே அளவு தான் பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்னும் அதிகப்படுத்தப்படவில்லை.
நாள் ஒன்றுக்கு 33 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதால் பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும். மேலும் பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்துக்குள் தெரிவித்தால் தான் அவர்கள் சிகிச்சை பெற முடியும். அதை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
குறைத்து காட்டுகிறார்கள்
ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் படுக்கைகள் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு மூச்சுத்திணறலுடன் அனுமதிக்கப்பட்ட சிலர் இறப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டுகின்றனர். இன்றைக்கு எல்லா சுடுகாட்டிலும் நீண்ட வரிசையில் உடல்கள் தகனத்துக்கு காத்து இருக்கின்றன.
இந்த நிலையை போக்க வேண்டும். இப்படி குறைத்து காட்டும் போது, அவர்கள் அந்த உடல்களை வீட்டுக்கு எடுத்து சென்று சடங்குகளை செய்து பலமணி நேரம் வீட்டில் வைக்கின்றனர். இதனால் நோய் தொற்று ஏற்படுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
வெளிப்படுத்த வேண்டும்
கொரோனாவுக்கு எவ்வளவு இறப்பு ஏற்பட்டாலும் அதை வெளிப்படுத்த வேண்டும். அதில் எந்த தவறும் கிடையாது. இதை அரசு கடைபிடிக்க வேண்டும். சேலம் மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்து காட்டிக்கொண்டிருக்கிறது.
அது சரியல்ல. சரியான புள்ளி விவரங்களை தெரிவிக்க வேண்டும். கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை பல மணி நேரம் காத்திருந்து அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களை மீட்டெடுக்க முடியும்
இந்த அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்து பின்னர், மீண்டும் தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தியது. போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டதால் சுமார் 6 லட்சம் பேர் ஆங்காங்கே நகரங்களில் இருந்தவர்கள் கிராமங்களுக்கு சென்று உள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படாததால் நோய் பரவல் அதிகரித்து உள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் எந்த கிராமத்துக்கு யார் வந்தாலும் உடனடியாக கிராம அதிகாரிகள் மூலம் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் நோய் பரவல் தடுக்கப்பட்டது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா நோய் பரவல் அதிகளவு ஏற்பட்டுள்ளது. ஆகவே கொரோனா பாதிப்பை குறைக்க வேண்டும் என்றால் அ.தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால் தான் இந்த பாதிப்பில் இருந்து மக்களை மீட்டெடுக்க முடியும். காய்ச்சல் முகாம்களை அதிகளவு நடத்த வேண்டும்.
தவறான தகவல்
அ.தி.மு.க. ஆட்சி முடியும் போது 500-க்கும் கீழ் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது. உலக அளவில் எந்த நாட்டிலும் கொரோனாவை முதல் அலையிலேயே முழுமையாக பரவலை கட்டுப்படுத்தியதாக எனக்கு தெரியவில்லை. வல்லரசு நாட்டில் கூட இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் ரெம்டெசிவிர், என்.95 மருந்து உள்பட மருத்துவ உபகரணங்கள் போதிய அளவு கையிருப்பில் வைத்திருந்தோம். அ.தி.மு.க. ஆட்சியில் தடுப்பூசி எல்லாம் வீணடிக்கப்பட்டது என்று சுகாதாரத்துறை அமைச்சர் தவறான தகவலை தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி
மு.க.ஸ்டாலின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தடுப்பூசி மருந்து எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்று தெரியவில்லை என்றார். ஆனால் இன்று அனைவரும் தடுப்பூசி போடுங்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அவர் இப்படிப்பட்ட கருத்துகளை கூறும்போது பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. அன்றைய தினமே இப்போது கூறும் கருத்தை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கூறி இருந்தால் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டு இருப்பார்கள்.
அன்றைய தினம் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் அனைவரும் இப்படி ஒரு விமர்சனம் செய்த காரணத்தினாலே அச்சத்தின் அடிப்படையில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட முன்வரவில்லை என்பது தான் உண்மை.