மல்லூரில் 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
பனமரத்துப்பட்டி:
மல்லூர் மற்றும் பனமரத்துப்பட்டி பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது மல்லூர் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் ஊர் சுற்றியவர்களை மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் அத்தியாவசிய தேவையின்றி இருசக்கர வாகனங்களில் பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். மேலும் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர மாட்டோம் என அவர்களை உறுதிமொழி எடுக்க வைத்தனர். முக கவசங்களை சரியாக அணியவும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர். மேலும் ஊரடங்கு உத்தரவை மீறியதால் 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை மல்லூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.