கடந்த 6 நாட்களில் 18 முதல் 44 வயதுடைய 32 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 நாட்களில் 18 முதல் 44 வயதுடைய 32 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.;

Update: 2021-05-28 22:09 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 நாட்களில் 18 முதல் 44 வயதுடைய 32 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில், கொரோனா வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக அனைவரும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி உள்ளது.
தொடக்கத்தில் முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், பின்னா் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது.  இந்த நிலையில், கடந்த 20-ந்தேதி முதல் தமிழகத்தில் 18 வயது முதல் 44 வயது வரையிலான அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் தொடங்கி வைத்தார்.
32 ஆயிரம் பேர்
இதைத்தொடர்ந்து  ஈரோடு மாவட்டத்தில் பவானி, நசியனூர், அந்தியூர், கோபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ள அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 
கடந்த 22-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 6 நாட்களில் மட்டும் 32 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இதுவரை மொத்தம் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்காக ஆங்காங்கே நடத்தப்பட்ட முகாம்களில் மட்டும் 32 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 
இதேபோல் மாவட்டம் முழுவதும் கொரோனா பரிசோதனை 6 லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்