குறுவை சாகுபடிக்காக நாற்றுகள் வெளியூர்களுக்கு அனுப்பும் பணி தீவிரம்
குறுவை சாகுபடியை மேற்கொள்வதற்காக எந்திரம் மூலம் நடவு செய்வதற்காக தஞ்சையிலிருந்து நாற்றுகள் வெளியூர்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
தஞ்சாவூர்:
குறுவை சாகுபடியை மேற்கொள்வதற்காக எந்திரம் மூலம் நடவு செய்வதற்காக தஞ்சையிலிருந்து நாற்றுகள் வெளியூர்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
நெற்களஞ்சியம்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.
அதன்படி கடந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகு குறிப்பிட்ட தேதியில் அணை திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிக அளவில் நடைபெற்றது. வழக்கமான பரப்பளவை விட 37 சதவீதம் கூடுதலாக நடைபெற்றது. இதேபோல் சம்பா சாகுபடியும் அதிக அளவில் நடைபெற்றது. இதனால் நெல் கொள்முதல் வரலாற்றுச் சாதனையாக அமைந்தது.
பாய் நாற்றங்கால்
இந்த நிலையில் தற்போது தஞ்சை மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி எனப்படும் முன்பட்ட குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் குறுவை சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் உள்ளிட்ட பகுதிகளில் பம்புசெட் மூலம் குறுவை சாகுபடி செய்வதற்காக நாற்றுகள் தஞ்சையிலிருந்து அனுப்பப்பட்டு வருகிறது.
இதற்காக தஞ்சையை அடுத்த களிமேடு பகுதியில் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் பாய் நாற்றங்கால் தயார் செய்யப்பட்டு உள்ளது. ஆடுதுறை 36 நெல் ரகமான இந்த நாற்றுகள் தற்போது 15 நாட்கள் ஆகிவிட்டது. எந்திரம் மூலம் நடவு செய்வதற்கு 15 முதல் 15 நாட்கள் ஆன நாற்றுகள் சிறந்ததாக இருக்கும் என்பதால் தற்போது பாய் நாற்றங்காலில் நாற்றுகள் எடுத்து வெளியூர்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் எதிர்பார்ப்பு
மேலும் களிமேடு பகுதிகளில் நெல் நாற்றுகள் பாய் நாற்றங்கால் மூலம் தயார் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணையில் இந்த ஆண்டு 97 அடி நீர்மட்டம் உள்ளதால் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மூத்த வேளாண் வல்லுநர் குழுவும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
டெல்டா பகுதியில் பாசன வாய்க்கால்கள் மற்றும் ஆறுகள் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது டெண்டர் கோரப்பட்டு வருகிறது. எனவே இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்படும் என்பதை அரசு உடனே அறிவிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.