நடமாடும் வாகனங்களில் காய்கறிகள் அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை தென்காசி கலெக்டர் சமீரன் எச்சரிக்கை
தென்காசி மாவட்டத்தில் நடமாடும் வாகனங்களில் காய்கறிகள் அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சமீரன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நடமாடும் வாகனங்களில் காய்கறிகள் அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சமீரன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
கடும் நடவடிக்கை
தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலின் காரணமாக முழுமையான ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனைத்துறை மற்றும் உள்ளாட்சித்துறைகளின் மூலமாக பொதுமக்களுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலமாக வீடுகளுக்கே சென்று வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இத்தகைய வாகனங்களில் உரிய விலைப்பட்டியல் இன்றி விற்கப்படும் காய்கறிகள், பழங்கள் வழக்கமான விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சித்துறைகளின் மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் அந்த வாகனங்களில் காய்கறி, பழங்களின் விலைபட்டியல் கட்டாயமாக இடம்பெற வேண்டும். விவசாயிகள், வியாபாரிகள் வாகனங்களில் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய அனுமதிச்சீட்டு பெறும்போது உரிய அலுவலரிடம் இருந்து விலைப்பட்டியலை பெற்றுக்கொள்ள வேண்டும்.
பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்கப்பதை உறுதி செய்ய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. கூடுதல் விலைக்கு விற்பனை இந்த கண்காணிப்பு குழு மூலமாக ஆய்வு செய்யப்பட்டு, வாகனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி உடனடியாக ரத்து செய்யப்படும்.
தொலைபேசி எண்கள்
காய்கறிகள் வினியோகம் குறித்து பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் தகவல்களை மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்: 04633-290548 மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்: 04633-210768 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.