திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட 3 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட 3 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட 3 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது.
கருப்பு பூஞ்சை
கொரோனா வைரசின் 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடுகிறது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று, நுரையீரலை அதிகமாக பாதிக்கிறது. இதனால் முதல் அலையைவிட தற்போது உயிரிழப்பு அதிகமாக உள்ளது. அதிலும் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. மேலும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டு படுக்கைகள் நிரம்பி விட்டன.
எனவே மருத்துவமனையில் படுக்கை கிடைத்து தொடர் சிகிச்சையால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதே நோயாளிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.
இந்த நிலையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது.பலர் உயிரிழந்து வருகிறார்கள். இது கொரோனா நோயாளிகளை மேலும் அச்சம் அடைய வைத்துள்ளது.
3 பேருக்கு பாதிப்பு
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 21 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். அதில் திண்டுக்கல், சின்னாளப்பட்டி, வேடசந்தூர், ஆத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 பேருக்கு முகத்தில் கருப்பு நிறத்தில் புண்கள் ஏற்பட்டன.
இதையடுத்து 5 பேரிடமும் மாதிரிகள் சேகரித்து மதுரை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் திண்டுக்கல்லை சேர்ந்த 52 வயது ஆண், சின்னாளப்பட்டி பகுதியை சேர்ந்த 60 வயது ஆண், வேடசந்தூரை சேர்ந்த 53 வயது ஆண் ஆகிய 3 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதியானது.இதையடுத்து ஒருவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், மற்ற 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.