பொள்ளாச்சியில் 1426 எக்டர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ 9¼ கோடி ஒதுக்கீடு

பொள்ளாச்சியில் 1,426 எக்டர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.9¼ கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வசுமதி தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-28 19:16 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் 1,426 எக்டர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.9¼ கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வசுமதி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

சொட்டுநீர் பாசனம் 

பயிர் சாகுபடியில் நீர் மேலாண்மையில் சொட்டுநீர் பாசனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் அனைத்து காய்கறி பயிர்கள், பந்தல் காய்கறி சாகுபடி, வாழை, மா, தென்னையில் அனைத்து ஊடுபயிர்கள், ஜாதிக்காய், பாக்கு போன்றவைகளுக்கும் சொட்டுநீர் பாசனம் அமைத்து கொள்ளலாம்

நேரடி பாசனத்தில் பாய்ச்சுவதை விட சொட்டுநீர் பாசனத்தில் தண்ணீர் பாய்ச்சுவதன் மூலம் 60 சதவீத நீரை சேமிக்கலாம். குறைந்த அளவு தண்ணீரில் அதிக பரப்பளவிலும் சாகுபடி செய்யலாம்.

ரூ.9¼ கோடி ஒதுக்கீடு 

2021- 22-ம் ஆண்டிற்கு பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய தோட்டக்கலை துறைக்கு 967 எக்டர் பரப்பளவிற்கு ரூ.6 கோடியே 35 லட்சமும், தெற்கு ஒன்றியத்தில் 459 எக்டர் பரப்பளவுக்கு ரூ.2 கோடியே 88 லட்சம் என மொத்தம் 1,426 எக்டர் பரப்பளவுக்கு ரூ.9 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரிய விவசாயி களுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும். அரசு அங்கீகாரம் பெற்ற சொட்டு நீர் பாசன நிறுவனங்களை விவசாயிகளே தேர்வு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கலாம் 

ஏற்கனவே பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் நிறைவடைந்த விவசாயிகள் மீண்டும் புதிதாக சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துக் கொள்ளலாம். 

சொட்டுநீர் பாசனம் அமைத்த விவசாயி களுக்கு கூடுதலாக துணை நீர் மேலாண்மை திட்டத்தில் நீர் ஆதாரத்தில் இருந்து வயலுக்கு குழாய் அமைக்க மானியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. 

மேலும் நீர் ஆதாரத்தில் நில மட்ட தொட்டி கட்ட ரூ.40 ஆயிரம் மானியம் வழங்கப்படும். இது தவிர மின்மோட்டார் அல்லது டீசல் எஞ்சின் வாங்க ரூ.15 ஆயிரத்திற்கு மிகாமல் அல்லது 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். 

எனவே இந்த திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்