பரமத்திவேலூர் அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை
பரமத்திவேலூர் அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்:
பிளஸ்-2 மாணவி
பரமத்திவேலூர் அருகே உள்ள காமாட்சி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). இவரது மனைவி சுமதி. இந்த தம்பதிக்கு பாரதி (20), ஸ்ரீநிதி (17) என்ற 2 மகள்கள் இருந்தனர். இதில் ஸ்ரீநிதி பரமத்திவேலூரில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால ஸ்ரீநிதி ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வந்தார். அவர் சரியாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 25-ந் தேதி அவரது தந்தை சீனிவாசன், ‘எப்போதும் செல்போனை பார்த்து கொண்டே இருக்காதே, ஒழுங்காக படி’ என்று கூறி திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இரவில் அனைவரும் தூங்க சென்று விட்டனர்.
தற்கொலை
இதனிடையே தூங்கி கொண்டு இருந்த ஸ்ரீநிதி வீட்டில் இருந்து வெளியே சென்று வாந்தி எடுத்துள்ளார். இதைப்பார்த்த சீனிவாசன் அவரிடம் விசாரித்தார். அப்போது ஸ்ரீநிதி விஷம் குடித்ததாக கூறியுள்ளார். இதனால் பதறிய சீனிவாசன் உடனடியாக மகளை மீட்டு பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் ஸ்ரீநிதி பலனளிக்காமல் இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பரமத்திவேலூர் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.