மேட்டூர் அணை வருகிற 12-ந் தேதி திறக்க வாய்ப்பு: குறுவை சாகுபடியில் முனைப்பு காட்டும் விவசாயிகள்

மேட்டூர் அணை வருகிற 12-ந் தேதி திறக்க வாய்ப்பு இருப்பதால், குறுவை சாகுபடியில் விவசாயிகள் முனைப்பு காட்டி வருகிறார்கள்.

Update: 2021-05-28 17:51 GMT
கொரடாச்சேரி,

காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் குறுவை பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் 100 அடி அளவிற்கு தண்ணீர் உள்ளதால் வழக்கம்போல் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்வதற்கு முனைப்பு காட்டி வருகிறார்கள்.

இளம் நாற்றுகள்

வயல்களை உழவு செய்தல், வரப்புகள் அமைத்தல், நாற்றங்கால் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் தற்போது தொடங்கி உள்ளனர். ஆழ்துளை கிணறு வசதி உள்ள இடங்களில் முன்கூட்டியே நெல் நாற்றுக்கள் தயாரித்து அதனை கொண்டு நடவு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இளம் நாற்றுகளுக்கு குறைந்த தண்ணீர் மட்டுமே தேவையிருக்கும். இந்த குறைந்த தண்ணீர் தேவையை ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் ஈடு செய்து கொண்டு, சற்று வளர்ந்த பயிர்களுக்கு கூடுதல் தண்ணீர் தேவைப்படும் காலகட்டத்தில் ஆற்று நீர் பாசனம் மூலம் சரி செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு விவசாய பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தூர்வார வேண்டும்

கொரடாச்சேரி ஒன்றியத்தில் முதற்கட்டமாக சஆயிரம் ஏக்கர் பரப்பில் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. குறுவை சாகுபடி பணிகளில் தீவிரம் காட்டி வருவதால் நெல்விதைகள், உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவைகளை தேவையான அளவிற்கு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில் ஆறுகளின் வழியாக தண்ணீர் விரைந்து வயல்வெளிகளுக்கு வந்து சேரும் வகையில் ஆறு மற்றும் வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்