ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை இளைஞர்கள் அலறியடித்து ஓட்டம்

கச்சிராயப்பாளையம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றி தெரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதை அறிந்து இளைஞர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-05-28 17:27 GMT
கச்சிராயப்பாளையம்


தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்து அமல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. மருத்துவம் உள்ளிட்டஅத்தியாவசிய தேவைகளுக்காக வரும்போது கொரோனா வழிகாட்டு நெறிமுகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி இருக்கிறது. ஆனால் ஊரடங்கு உத்தரவை மீறி சிலர் தேவையில்லாமல் சுற்றித்திரிவருகின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
அந்த வகையில் கச்சிராயப்பாளையம் பகுதியிலும் ஊரடங்கு உத்தரவை மீறி  இளைஞர்கள் பலர் சுற்றி திரிகிறார்கள். இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்தாக புகார் எழுந்தது.  

இதையடுத்து சின்ன சேலம் மண்டல துணை தாசில்தார் உமா தலைமையில் கச்சிராயப்பாளையம் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் கவுதம், சரவணன் ஆகியோர் இணைந்து கச்சிராயப்பாளையம் பழைய பஸ் நிலையம் அருகில் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்தவர்களை பிடித்து கொரோனா பரிசோதனை செய்தனர். அப்போது சிலர் தங்களை விட்டு விடும்படி் அதிகாரிகளிடம் கெஞ்சினர். ஆனால் கொரோனா பரிசோதனை நடத்திய பிறகே அவர்களை அதிகாரிகள் விடுவித்தனர்.
முன்னதாக தேவையின்றி மோட்டார் சைக்கிளிலும், நடந்தும் சென்றவர்களையும் பிடிப்பதற்காக போலீசார் அவர்களின் அருகில் சென்றனர். அப்போது கொரோனா பரிசோதனை நடப்பதை பார்த்த சிலர் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். மேலும் சாலையோரங்களிலும், பஸ்நிலையங்களிலும் அமர்ந்து இருந்தவர்களும் அருகில் உள்ள தெருக்கள், மூலை முடுக்கு வழியாக ஓட்டம் பிடித்ததை காண முடிந்தது. இதைப் பார்த்து சாலையில் சற்று தொலைவில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும் வாகனங்களை திருப்பிக்கொண்டு வந்த வழியே திரும்பி சென்றனர். 

சுகாதாரத் துறையினர், வருவாய் துறையினர் மற்றும் போலீசாரின் இந்த நடவடிக்கையால் கச்சிராயப்பாளையம் பகுதியில் எந்த ஒரு வாகன ஓட்டியையும், பாதசாரியையும் காண முடியவில்லை. இதனால் சாலை மற்றும் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். 

மேலும் செய்திகள்