தூத்துக்குடி மாவட்டத்தில் 2500 டன் கருப்பட்டி தேக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 2500 டன் கருப்பட்டி தேக்கம் அடைந்துள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக வாங்குவதற்கு ஆள் வராததால் சுமார் 2 ஆயிரத்து 500 டன் கருப்புக்கட்டி விற்பனையாகாமல் தேங்கி கிடக்கிறது. மேலும் விலையும் குறைந்ததால் பனை தொழிலாளர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.
பனை தொழில்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம், உப்பு உற்பத்தி, மீன்பிடி தொழில் விளங்கி வருகிறது. அதேபோன்று பனை தொழிலிலும் மக்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் பனை தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை பதநீர் இறக்கப்பட்டு வருகிறது. இதில் ஜூன், ஜூலை மாதங்களில் அதிக அளவில் பதநீர் இறக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் பதநீர் உற்பத்தி தொடங்கியது. படிப்படியாக பதநீர் விற்பனை அதிகரித்து வந்தபோது, கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலுக்கு வந்து உள்ளது. இதன் காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன. அதேபோன்று பனை தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.
வாங்க ஆள் இல்லை
மாவட்டம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் பதநீர் இறக்கி வருகின்றனர். வெளியூருக்கு சென்ற தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு வந்து பனை தொழிலை செய்து வருகின்றனர். இவர்கள் அன்றாடம் பதநீரை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். விற்பனை செய்த பதநீர் போக, மீதம் உள்ள பதநீரை காய்ச்சி கருப்புக்கட்டியாக தயாரித்து விற்பனை செய்து வந்தனர். தற்போது வழக்கம்போல் பதநீரை தொழிலாளர்கள் இறக்கி வருகின்றனர். ஆனால், ஊரடங்கு காரணமாக பதநீர் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும், பெரும்பாலான இடங்களில் கருப்புக்கட்டி தேங்கி கிடக்கிறது. தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம், வேம்பார், சாத்தான்குளம், உடன்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் கருப்புக்கட்டி தேக்கம் அடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் 10 கிலோ கருப்புக்கட்டி ரூ.2 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அதனையும் வாங்குவதற்கு ஆள் இல்லை. இதனால் பனை தொழிலாளர்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.
2,500 டன் தேக்கம்
இதுகுறித்து பனை தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ராயப்பன் கூறியதாவது:-
தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பனைமரங்கள் அதிகம் உள்ளன. இங்கு பனை தொழில் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பனை தொழிலில் நல்ல லாபம் கிடைத்தது. இதனால் பலர் பனை தொழிலை மீண்டும் நாடி வந்தனர்.
தற்போது முழு ஊரடங்கு காரணமாக பதநீரை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் கருப்புக்கட்டி விலையும் குறைந்து விட்டது. ஆனாலும் வாங்குவதற்கு ஆட்கள் வர முடியாததால் தேங்கி கிடக்கிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்து 500 டன் கருப்புக்கட்டி தேங்கி உள்ளது. இதனால் பனை தொழிலாளர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் பதநீர் விற்பனைக்கும், கருப்புக்கட்டி விற்பனைக்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.