கொரோனா நோயாளிகளுக்கு இடதுகை விரலில் மை
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டவர்களை அடையாளம் காணும் வகையில் அழியாத மை வைக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்படுகிறது.
அதோடு சுமார் 400 பேர் இறக்கின்றனர். அரசு மருத்துவமனைகள், சிறப்பு மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி விட்டன.
இதனால் அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு உள்பட பிற வார்டுகளும், கொரோனா வார்டாக மாற்றப்பட்டு உள்ளன. எனினும், படுக்கை கிடைக்காமல் கொரோனா வார்டுக்கு வெளியே நோயாளிகள் காத்திருக்கும் பரிதாபம் ஏற்பட்டு இருக்கிறது.
எனவே, லேசான பாதிப்பு இருக்கும் கொரோனா நோயாளிகள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 26 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. தற்போது 3 ஆயிரத்து 500 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அதில் 1,250 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டு, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை பெறுகின்றனர்.
இவர்களின் உடல்நிலையை கண்காணிப்பதற்கு தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.
அதேநேரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. இதனால் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டவர்களில் சிலர் வெளியே சுற்றித் திரிகிறார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனவே வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டவர்களை அடையாளம் காணும் வகையில், அவர்களின் இடதுகை விரலில் அழியாத மை வைக்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் கொரோனா நோயாளிகள் வெளியே நடமாடினால் எளிதில் கண்டுகொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.