நாகையில் டாக்டர்- நர்சுகள் உள்பட 123 பேருக்கு பணி நியமன ஆணை - அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

நாகையில் டாக்டர்-நர்சுகள் உள்பட 123 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

Update: 2021-05-28 12:53 GMT
நாகப்பட்டினம்,

நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற டாக்டர்கள், நர்சுகள் மற்றும் சுகாதார பணியாளர்கள், லேப் டெக்னீசியன் உள்பட 123 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பணி நியமன ஆணையை வழங்கினார். இதில் கலெக்டர் பிரவீன் நாயர், எம்.எல்.ஏ.க்கள் நாகை மாலி, முகமது ஷாநவாஸ், மருத்துவ கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் திருமக்கோட்டை பெருமாள் கோவில் நத்தம் கிராமத்தை சேர்ந்த மோகன்-ராணி தம்பதியின் மகள் சுபிஷா (வயது 8) தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது வேதாரண்யம் பகுதியில் பாட்டி வீட்டில் வசித்து வரும் இவர் தனக்கு சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சிறுக, சிறுக பணம் சேர்த்து வைத்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த ரூ.4,185-யை கொரோனா நிவாரண நிதிக்கு கொடுக்க முன்வந்தார். இதையடுத்து தனது பெற்றோருடன் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த சுபிஷா, ரூ.4,185-க்கான காசோலையை அமைச்சர் மெய்யநாதனிடம் வழங்கினார். இதையடுத்து மாணவிக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

இதை தொடர்ந்து வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தி நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரவின் நாயர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெற்றிச்செல்வன், ராஜு, ஊராட்சி மன்ற தலைவர் ராமையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பின்னர் அமைச்சர் ெமய்யநாதன் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தேவைக்கேற்ப சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும். மிக விரைவில் ஒவ்வொரு கிராமத்திலும் வார்டுகள் தோறும் வீட்டிற்கே சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும்.மாவட்டத்தில் நாள்தோறும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன என்றார். கூறினார்.இதில் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரராஜன், நாகை மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர் கவுதமன் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் வாய்மேடு தலைஞாயிறு பகுதிகளில் போடப்படும் தடுப்பூசி முகாம்களை அமைச்சர் ஆய்வு செய்தார்.

பின்னர் வேதாரண்யம் தாயுமானவர் வித்தியாலயம் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிறப்பாக செயல்படும் வேதாரண்யம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, என்ஜினீயர் பிரதன் பாபு ஆகியோருக்கு அமைச்சர் மெய்யநாதன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார் முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜு, வெற்றிச்செல்வன், நகர செயலாளர் புகழேந்தி முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கோடியக்கரை ஊராட்சியில் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்காக உண்டியல் வைத்து பணம் வசூலிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து உண்டியலில் பணம் போட்டனர். உண்டியல் மூலம் வசூலான ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை கோடியக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணியை பார்வையிட வந்த அமைச்சர் மெய்யநாதனிடம், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியம் வழங்கினார்.

இதேபோல கீழையூர் ஒன்றியம் ஈசனூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் 20 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் பார்வயைிட்டு ஆய்வு செய்தார்.இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்