திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் 1,000 படுக்கைகள்; அமைச்சர் நாசர் பேட்டி
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,000 படுக்கைகள் 4 நாட்களில் தயார் நிலைக்கு வந்து விடும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
ஆய்வு கூட்டம்
கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுகூட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் நாசர் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆகியோர் தலைமை தாங்கினர். கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் லோகநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆய்வு கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அதிகாரிகளிடம் ஒவ்வொரு ஒன்றியத்திலும் கொரோனா பாதிப்பு நிலவரம், சிகிச்சை பெற்று திரும்பியவர்கள் எத்தனை பேர்? இறப்பு விகிதம் என்ன? கொரோனா பரவலை தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது? மேலும் கூடுதலாக தேவைப்படும் அடிப்படை வசதிகள் போன்றவற்றை அமைச்சர் நாசர் கேட்டறிந்தார்.
ஆகிசிஜன் வசதியுடன் கூடிய 1,000 படுக்கைகள்பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் நாசர் கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,000 படுக்கைகள் இன்னும் 4 நாட்களில் தயார் நிலைக்கு வரும். ஒன்றியம், நகரம், பேரூராட்சி என ஆங்காங்கே இருக்கும் அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி கொரோனா தொற்றுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றிட அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அரசு ஆஸ்பத்திரிகளின் தேவைகளுக்காக அமைச்சரிடம் தனியார் நிறுவனம் சார்பில் ஆக்சிஜனுடன் கூடிய 50 சிலிண்டர்கள் வழங்கப்பட்டது.
முற்றுகைஇதனையடுத்து கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கான முதல்கட்ட பரிசோதனை மையத்தை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார். அப்போது அந்த வளாகத்தின் வெளியே 30-க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் திரண்டு திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், தங்கள் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா வார்டு கொண்டு வந்தால் கொரோனா நோயாளிகள் பலரும் வந்து செல்வார்கள். எனவே இந்த கொரோனா சிகிச்சை மையத்தை திறக்க கூடாது என அவர்கள் வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இது கொரோனா சிகிச்சைக்கான ஒட்டு மொத்த மையம் கிடையாது. இந்த மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெரும்பாலும் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவங்கள் அதிக அளவு சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
அவ்வாறு வரும் பெண்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு முதல்கட்ட சிகிச்சை அளிப்பதற்கான தொடங்கப்பட்டுள்ள சிறப்பு மையம் தான். இங்கு கொரோனா தொற்று உள்ளவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வந்து விடுவார்கள் என்பது தவறான தகவல் எனவும் அவர் விளக்கி கூறினார்.
இதனை ஏற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.