தொற்று பரவலை தடுக்க கிராமப்புறங்களில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம்: கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

தொற்று பரவலை தடுக்க கிராமப்புறங்களில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்க உள்ளதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2021-05-28 03:05 GMT

மருத்துவ உபகரணங்கள்

புதுவையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் வழங்கிய கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்களை சுகாதார துறையிடம் வழங்கும் நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவ உபகரணங்களை சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் அருண், தேசிய சுகாதார இயக்கக இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலுவிடம் ஒப்படைத்தார்.

நிகழ்ச்சியின் முடிவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நம்பிக்கையோடு வரலாம்

புதுவையில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. அதேபோல் இறப்பும் குறைந்து வருகிறது. கொரோனாவுக்கு ஒருவர் கூட இறக்கக்கூடாது என்ற நிலை வரவேண்டும். புதுவையில் தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 400-க்கும் அதிகமான ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. மக்கள் நம்பிக்கையோடு வரும் அளவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு உள்ளது.

உயிர் காற்று திட்டத்துக்கு பொதுமக்களின் ஆதரவும் கிடைத்துள்ளது. எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதியில் கொரோனா சிகிச்சை மையம் அமைத்து வருகிறார்கள். இதேபோல் தடுப்பூசி போடவும் மக்களை தயார் படுத்தவேண்டும்.

கிராமங்களில் தடுப்பூசி

மக்கள் இன்னும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் கொரோன தொற்று 2-வது அலையோடு முடிந்துவிட வேண்டும். தொற்று பரவலை தடுக்க புது முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கிராமங்களை தேர்ந்தெடுத்து தடுப்பூசி போட உள்ளோம்.

காரைக்காலில் பல்ஸ் ஆக்சி மீட்டர் வங்கி தொடங்கி உள்ளனர். அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் பல்ஸ் ஆக்சி மீட்டரை எடுத்துச் சென்று வீடுகளில் இலவசமாக பயன்படுத்தலாம். நோய் குணமான பின்பு அதை மீண்டும் ஒப்படைத்துவிட வேண்டும். அது போன்ற திட்டத்தை புதுவையிலும் தொடங்க விரும்புகிறேன்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

மேலும் செய்திகள்