தயாநிதிமாறன், உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உள்ளிட்டோர் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு 80 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கமிஷனரிடம் வழங்கப்பட்டது

அமைச்சர் சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உதயநிதி ஸ்டாலின், தாயகம் கவி ஆகியோர் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு 80 ஆக்சிஜன் செறிவூட்டிகள், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடியிடம் வழங்கப்பட்டது.

Update: 2021-05-28 00:20 GMT
இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆக்சிஜன் செறிவூட்டிகள்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு தலைமையில் கடந்த 24-ந்தேதி அன்று நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.இதில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் ஆலோசனையை ஏற்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளடங்கிய 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 22 சட்டமன்ற உறுப்பினர்களின் சார்பில் ஒருவர் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் என மொத்தம் 500 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சென்னை மாநகராட்சிக்கு வழங்குவதாக உறுதி அளித்தனர்.

தயாநிதிமாறன், உதயநிதி ஸ்டாலின்
அதன் அடிப்படையில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக முதல்-அமைச்சர் 26-ந்தேதி அன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடியிடம் வழங்கினார்.தொடர்ந்து, மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தயாநிதிமாறன், துறைமுகம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.கே.சேகர்பாபு, 
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தாயகம் கவி ஆகியோர் தலா 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வீதம் 80 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடியிடம் கொடுத்தனர்.

நன்கொடை
இதுவரை சென்னை மாநகராட்சியின் சார்பில் 2 ஆயிரத்து 705 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டு, 2 ஆயிரத்து 80 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், தன்னார்வலர்களின் மூலமாக 1,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளன.மாநகராட்சியிடம் இதுவரை பெறப்பட்ட 3 ஆயிரத்து 80 ஆக்சிஜன் செறிவூட்டிகள் பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கும், கொரோனா சிகிச்சை மையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்