சேலம் மாவட்டத்தில் புதிய உச்சமாக 987 பேருக்கு கொரோனா
புதிய உச்சமாக 987 பேருக்கு கொரோனா
சேலம்:
சேலம் மாவட்டத்தில் புதிய உச்சமாக கொரோனாவுக்கு 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா அதிகரிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிப்புகளும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். நேற்று முன்தினம் 841 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 987 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதான் மாவட்டத்தில் ஒரு நாள் அதிகபட்ச பாதிப்பாகும்.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 391 பேர், சேலம் ஒன்றியத்தில் 61 பேர், ஆத்தூர், ஓமலூர் ஆகிய பகுதிகளில் தலா 59 பேர், எடப்பாடியில் 58 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 44 பேர், காடையாம்பட்டியில் 33 பேர், தாரமங்கலத்தில் 29 பேர், சங்ககிரியில் 28 பேர், மேச்சேரியில் 27 பேர், மகுடஞ்சாவடி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 23 பேர், நங்கவள்ளி, வீரபாண்டி, வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 22 பேர், கொங்கணாபுரத்தில் 21 பேர், மேட்டூரில் 13 பேர், கெங்கவள்ளியில் 12 பேர், கொளத்தூர், பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா 11 பேர், நரசிங்கபுரத்தில் 5 பேர், ஏற்காட்டில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
60 ஆயிரத்தை தாண்டியது
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 689 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 637 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 6 ஆயிரத்து 338 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 170-க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
30 பேர் பலி
மாவட்டத்தில் கொரோனாவுக்கு தினமும் ஏராளமானவர்கள் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 893 ஆக அதிகரித்துள்ளது.
.................