சேலம் சஞ்சீவிராயன்பேட்டை பகுதியில் சாலையோர கடைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வியாபாரிகள் புகார்

வியாபாரிகள் புகார்

Update: 2021-05-27 22:33 GMT
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி சஞ்சீவிராயன் பேட்டை பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் நேற்று மாலை மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரனிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- 
சேலம் சஞ்சீவிராயன்பேட்டை மார்க்கெட் பகுதியில் பல ஆண்டுகளாக சாலையோரம் கடைகளை வைத்து தொழில் நடத்தி வருகிறோம். இங்கு 50 கடைகள் உள்ளன. தற்போது முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் யாரும் கடைகளை வைக்கவில்லை. 
இதனிடையே மாநகராட்சி ஊழியர்கள் 10-க்கும் மேற்பட்டோர் எங்கள் பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சாலையோரம் இருந்த கடைகளை பிரித்து எடுத்து சேதப்படுத்தியுள்ளனர். எனவே அத்துமீறி கடைகளை சேதப்படுத்தியதோடு பெண்கள் என்றும் பாராமல் இழிவாக பேசிய மாநகராட்சி ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்